சக்கர நாற்காலியில் அதிபர் வாஹித் பின்னால் நிற்பவர் டைலர்

திரு ஹாலந்து சி டைலர் (Holland C. Tylor) இஸ்லாமுக்கு மதம் மாறியவர். அவர் தன்னை ஒரு மிதமுஸ்லிம் (Moderate Muslim) என்று கூறிக் கொள்கிறார். அவர் காலம் சென்ற இந்தோனேசிய அதிபர் வாஹிதின் (Abdurrahman Wahid) நண்பராக இருந்தார். இவரும் ஒரு மிதமுஸ்லிம் தான். திரு டைலர் பல பிரபலமான மித முஸ்லிம்களின் கட்டுரைகளை தொகுத்து “The Illusion of an Islamic State “[இஸ்லாமிய நாடு என்ற மாயை] என்ற நூலாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார். இஸ்லாம் ஒரு மிதமதம் என்றும் தீவிரவாதிகள் அதை கடத்திக் கெடுத்து விட்டார்கள் என்றும் கூறிக்கொள்கிறார்

நான் டைலரை ஒரு ஈமெயில் விவாதத் தளத்தில் சந்தித்தேன். அங்கே நானும் என் நண்பர்கள் சிலரும் (Nonie Darwish மற்றும் Andrew Bostom) இஸ்லாம் சீர்திருத்தப்பட முடியாது என்றும் மித இஸ்லாமுக்கு வாய்ப்பே இல்லை என்றும் வாதிட்டோம். முகமது ஒரு கொடூரன். அவனது போதனைகளும் கொடூரமானது. ஆகையால் இஸ்லாம் என்றுமே ஒரு மித மதமாக இருக்க முடியாது. எதிர் தரப்பில் வாதிட்டவர்கள் Dr. Zuhdi Yasser, Mr. Tarek Fatah, Dr. Daniel Pipes மற்றும் Mr. Holland Tylor

அங்கேதான் டைலருடன் அறிமுகமானேன். எனது நூலைப் படிக்கும் படி அவரைக் கேட்டுக் கொண்டேன். அவரும் தன்னுடைய நூலை படிக்கும் படி என்னைக் கேட்டுக் கொண்டார். நாங்கள் தங்கள் தங்கள் நூலைப் பரிமாற்றிக் கொண்டோம்.

அவரது நூலின் பல கட்டுரைகளைப் படித்தேன். அவருடைய கட்டுரைகளையும் வாஹிதின் கட்டுரையையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு டஜன் கேள்விகளை தயார் செய்தேன். இந்த வருடத்தின் (2012) மே மாதம் 15 அன்று  டைலரிடம் எனது கேள்விகளுக்கு தயாரா என்று கேட்டு எழுதினேன். அவர் உடனே “நான் தயார்” என்று பதிலளித்தார் அடுத்த நாள் என்னுடைய முதல் கேள்வியை அனுப்பினேன்.

அவர் பதில் அனுப்பவில்லை. அவரின் பதிலுக்குக் காத்திருப்பதாக சிறு குறிப்பை அனுப்பினேன். “கொஞ்சம் பொறுங்கள். உங்கள் கேள்விக்கு பதில் எழுதுவேன். வேண்டுமென்றால் மற்ற கேள்விகளையும் நீங்கள் அனுப்பலாம். அவைகளையும் பார்க்க விரும்புகிறேன்.”என்று பதிலளித்தார்.

நான் கேள்விகளை ஒவ்வொன்றாகவே அனுப்ப விரும்புவதாகவும் அவைகளை ஒவ்வொன்றாகவே பதிவிட விரும்புவதாகவும் கூறினேன். (உண்மையிலேயே , எங்கே எல்லா கேள்விகளையும் ஒன்றாகப் பார்த்து பயந்து போய் ஆள் அம்பேல் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் என் கவலை.) அவரிடம், இதை ஒரு விவாதமாக வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினேன். அவருடைய பதிலைப் பற்றி கருத்தளிப்பதோ அதை மறுத்துப் பேசவோ மாட்டேன் என்றும் கூறினேன். இஸ்லாம் ஏன் ஒரு மித மதமாக இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன் என்ற என் கருத்துக்களையும், அதற்கான அவருடைய பதில்களையும் அருகருகே பதிவிடுவேன் என்றும் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் அவருடைய பதிலே கடைசி பதிலாக இருக்கலாம் என்றும் கூறினேன்.

டைலர் அவர்கள் அமைதியாக இருந்தார்.  மே மாதம் 29 ல் அவருக்கு மற்றொரு நினைவு-படுத்தி அனுப்பி எங்கள் பேட்டியைத் தொடர எனது ஆர்வத்தைக் கூறினேன். அவர் கூறும் தீர்வு ஒரு கானல்நீர் தான் என்று ஏன் நினைக்கிறேன் என்று கூறினேன். ஒருவர் உடல்நிலை மோசமாக இருக்கும்போது அவருக்கு தகுந்த சரியான மருந்தைத்தான் தரவேண்டும் என்றும் அவருக்கு தவறான நம்பிக்கை அளிப்பது அவருக்கு தீங்காக முடியலாம் என்றும் விளக்கினேன். மனித இனம் இஸ்லாமினால் பீடிக்கப் பட்டு இருக்கிறது. உங்கள் தீர்வு வேலை செய்யுமா? என்று கேட்டேன். இந்த கேள்வி மிகவும் முக்கியம் என்றும் நீங்கள் உலகத்தினை ஏமாற்றப் பார்க்கிறீர்களா அல்லது இஸ்லாம் அமைதியான மற்றும் மிதமான மதமாக மாற முடியுமா என்றும் கேட்டேன்.

“உங்கள் பிரசங்கத்தை நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அதை நிரூபித்து இந்த புதிருக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் பிரசங்கத்தை நீங்களே நம்பாவிட்டால் நான் சொல்வற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் தவறானது என்று அறிந்த ஒன்றை பரப்புவதற்கு உங்களுக்கு காரணம் ஏதேனும் இருக்கும்.” என்று கூறினேன். உண்மை என்றென்றும் மேகத்தில் மூடி மறைந்து இருக்காது என்றும் உண்மையின் பக்கம் நிற்பதே நல்லது என்றும் கூறினேன். உண்மையான இஸ்லாம் மிதமானது என்ற அவரின் கூற்றை நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதைக் கைவிடும் படியும் வலியுறுத்தினேன்.

டைலர் கோபித்துக் கொண்டார். அவர் தான் கத்தாரில் இருப்பதாகவும், ஒரு கருத்தரங்கில் (Brookings Institution’s U.S. – Islamic World Forum) பங்கு பெற்றிருப்பதாகவும் மற்ற வேலைகளும் இருப்பதாகவும். கூறினார். எனது ஈமெயில் “உங்களது நோக்கத்திற்கு (அதாவது, என்னை பதில் கூற வைப்பது அல்லது வெளிப்படையாக என் கருத்துக்களை கைவிட வைப்பது) ஊறு விளைவிக்கக் கூடியது.” என்று சொன்னார். எங்கள் உரையாடல் உலகத்தின் விதியையோ பெரும்பாலான மக்களின் எண்ணங்களையோ மாற்றப் போவதில்லை என்றார். பிறகு, “ஆனபோதிலும், பரஸ்பர மரியாதை உரையாடலை இலகுவாக்கும்” என்றார்.

நான் அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் அவரின் ரொம்பவே பெரிய நூலைப் படித்து ஏமாந்து போனதாகவும், அந்த நூல் காலாகாலமாக கூவப்படும் பொய்களைத் தவிர எனக்கு இஸ்லாமைப் பற்றி எந்த புதிய தகவலையும் கொடுக்கவில்லை என்றும் எனது கேள்விக்கு இன்னும் அவர் பதில் கூறாமல் அலட்சியப் படுத்துகிறார் என்றும் கூறினேன். கத்தாரில் இன்டர்நெட் இல்லை என்ற பருப்பு என்னிடம் வேகுமா. அவர் என்னை அலட்சியப் படுத்தியதற்கு மாறாக நான் அவரை அவமரியாதையாக நடத்தி விட்டேனாம். பரவாயில்லை. என்னை நாயே பேயே என்றாலும் பரவாயில்லை. என் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் போதும். எனது குறிக்கோள் இஸ்லாம் என்பது ஒரு முற்றிய நோய் என்று நிரூபிப்பதுதான். இந்த பீடை குணமாகும் என்று நம்புவதில் பலனில்லை.

நாட்கள் கடந்தன. பதிலெதுவும் இல்லை. அவருக்கு பதிலளிப்பதில் சிரமம் இருக்கக்கூடும் என்று நினைத்தேன். அதுவும் நல்லது தான். எனவே என் இரண்டாவது கேள்வியை அனுப்பினேன்.. “அதைப் படித்தேன். உங்கள் வாதங்களைப் பற்றியும் அவ்வாதங்களின் பின்னால் உள்ள விளைவுகளைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்.” என்றார். எனது தளத்தில் முன்னரே நடத்தப்பட்ட விவாதங்கள் எதேனும் இருக்கிறதா என்று கேட்டார். நான் எவ்வாறு என் கேள்விகளைப் பதிவிடப்போகிறேன் என்றும் அதற்கு அவர் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிந்துகொள்வதற்காக இவ்வாறு கேட்டார்.

எனது தளத்தில் ஏராளமான விவாதங்கள் பதிவிடப்பட்டிருக்கின்றன என்றும் ஆனால் இது ஒரு விவாதம் அல்ல என்றும் சொன்னேன். என் கேள்விகளையும் அவரின் பதில்களையும் ஒரே பக்கத்தில் பதிவிடுவேன் என்றும் மேற்கொண்டு எந்த கருத்தையும் பதிய மாட்டேன் என்றும் கூறினேன். அவர் பதிலே கடைசி பதிலாக இருக்கலாம். அடுத்த கேள்வி அடுத்த தலைப்புடையதாக இருக்கும்.

ஜூன் 18 ல், அதாவது என் முதல் கேள்வியை அனுப்பி ஒரு மாதத்துக்கும் மேலான பிறகு, டைலர் அவர்கள் “உங்கள் முதல் கேள்விக்கு பதிலளிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது பதிலை ஓரளவுக்கு முடித்து விட்டேன். அதை திருத்தம் செய்தவுடன் அனுப்பிவிடுவேன்.” என்று எழுதினார்.

மறுபடியும் பதில் இல்லை. ஜூலை 9 ல், அவரின் பதிலை மறுவாசிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்ததா என்று கேட்டு எழுதினேன்.

அவர் இவ்வாறு பதிலளித்தார். “நான் எங்களது நிறுவனத்திற்கு (International Institute of Qur’anic Studies) கிடைக்க வாய்ப்பு இருக்கும் இரண்டு பெரிய பண உதவிகளைப் பற்றி கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களைப் பற்றி மறந்து விடவில்லை”

இன்று ஜூலை 29, அதாவது 2.5 மாதத்திற்குப் பிறகும் எனது முதல் கேள்விக்கு பதில் வரவில்லை. அது தயாராக இருக்கிறது என்றும் சொல்லி இருந்தார். ஏன்? இதற்கு பதில் ஒருவேளை அவருடைய கடைசி மெயிலில் இருக்கலாம். அவர் அவருடைய நிறுவனத்திற்காக இரண்டு பெரிய நன்கொடைகளை எதிர் நோக்கி இருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் நிலையில் நான் கூட இவ்வாறு செய்தாலும் செய்யலாம். ஆனால், என்ன. இஸ்லாமை உதறி எறிந்தவர்களுக்கு ஏது பணமுடிப்புகள்?. எனக்குக் கிடைப்பதோ சில சிறிய உதவிகள். அதுவும் எனது தளத்தின் செலவில் 20 % மட்டுமே சரிகட்டும். எனக்கு இதுவரை எந்த பண முடிப்புகளும் கிடைக்காத படியால், அவர்மீது தீர்ப்பு கூறும் நிலையில் நான் இல்லை.

கீழே வருவது எனது முதல் கேள்வி. இந்த பதிவின் லிங்க்கை (link) டைலர் அவர்களுக்கு அனுப்புவேன். அவரின் பதில் கிடைத்தால் அதை சேர்ப்பேன். இரண்டாவது கேள்வியை இன்னும் சில நாட்களில் பதிவிடுவேன். இது போன்ற விவாதங்கள் உலகின் விதியை மாற்றும் என்றும் இஸ்லாமைப் பற்றிய மக்களின் பார்வைகளை சீர்படுத்தும் என்றும் நம்புகிறேன். நான் இஸ்லாமைப் பற்றி எழுத ஆரம்பித்த 1998 ல் பெரும்பாலானோருக்கு இந்த மதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. இன்று, அப்படியில்லை. பலருக்கும் முகமதின் வாழ்க்கையைப் பற்றிய பச்சைப்பச்சையான துணுக செய்திகள் தெரிந்திருக்கிறது. இதை ஆரம்பித்தது நான் தான் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்போது இந்த ஒளி நன்கு பரவிவிட்டது. யாரும் மறைக்க முடியாது. நான் எடுக்கப்போகும் படம் இஸ்லாமின் சவப்பெட்டியில் அடித்த கடைசி ஆணியாக இருக்கும். முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்படப்போகும் காலம் வரும் என்று பத்து வருடத்திற்கு முன் கூறினேன். அது நெருங்கிவிட்டது.

 

அன்பிற்கினிய ஹாலந்

உங்கள் புத்தகத்தின் (The Illusion of an Islamic State) ஆங்கில பதிப்பில் உள்ள உங்களால் எழுதப்பட்ட FIGHTING FIRE WITH WATER  என்று தலைப்பிடப்பட்ட முன்னுரையையும், இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் வாஹிதினால் எழுதப்பட்ட THE ENEMY WITHIN என்று தலைப்பிடப்பட்ட ஆசிரியர் அறிமுகத்தையும் படித்தேன். மற்ற பங்களிப்பாளர்களின் கட்டுரைகளையும் சில பக்கங்கள் படித்தேன். எனது கேள்விகளை நீங்கள் மற்றும் வாஹித் எழுதியவற்றில் இருந்து மட்டுமே எடுத்திருக்கிறேன்.

துவங்குவதற்கு முன் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். நமது வளர்ப்புச் சூழல் ஒன்றே. எனது இஸ்லாமும் நீங்களும், வாஹிதும் முன்வைக்கும் இஸ்லாமும் வேறு வேறானதல்ல. நீங்கள் ஈரானில் நான் வளர்ந்த காலத்திலேயே வாழ்ந்திருக்கிறீர்கள். நாம் எவ்வளவு தாராளமானவர்களாக இருந்தோம் என்று உங்களுக்கு நினைவிருக்கும். இப்போது இருக்கும் எந்த இஸ்லாமிய பேத்தல்களும் அப்போது இல்லை. என்னே அருமையான நாட்கள். 1979 ல் எல்லாம் ஒரே இரவில் மாறிவிட்டது. குட்டைப்பாவாடை அணிந்த பீட்டில்ஸ் (Beatles) மற்றும் எல்விசின் (Elvis) பாடல்களுக்கு குதித்தாடிய மிதமுஸ்லிம்கள் என்று  அழைக்கப்பட்டவர்கள் எல்லாம் முக்காடுக்குள்ளும் தாடிக்குள்ளும் மறைந்து கொண்டு இஸ்லாமிஸ்டுகள் (Islamists) ஆனார்கள்.

அந்த நேரத்தில் நான் இரானை விட்டு வெளியேறி இருந்தேன். 15 வருடத்திற்குப் பிறகு, 1994 ல், குரானைப் படிக்கும் வரையில் இது எப்படி நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்னர் இதுவரை புதிர்களாகவும் குழப்பங்களாகவும் இருந்தவைகள் எல்லாம் அருமையாக புரிய ஆரம்பித்தன. முகமதின் வாழ்க்கை வரலாறான சிராவை (Sira) படித்தபோது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் உறுதிப்படுத்தப்பட்டன. ஆகையால் உங்களின் வளர்ப்பைப் பற்றி எனக்கு தெரியும். நானும் அதே சாக்கடையில் புரண்டுகொண்டிருந்த பன்றி தான்.

உங்களிடம் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுகிறேன். என் கேள்விகள் நீங்கள் கற்பித்துக் கொண்டிருக்கும் இஸ்லாமைப் பற்றி அல்ல. அதைப் பற்றி எனக்கு முன்னரே தெரியும். உங்களிடம் சவால் விடுவதற்கே இந்த கேள்விகள். நீங்கள் கற்பிக்கும் இஸ்லாம் உண்மையானதல்ல என்றும் அது நிற்க முடியாத ஒன்று என்றும் ஒரு ஏமாற்றுவேலைதான் என்றும் உங்களுக்குப் புரியவைப்பதுதான் எனது நோக்கம். எல்லா ஏமாற்று வேலைகளும் ஆபத்தானவையே. தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடு என்ற மாயையில் உழல்வதாக நீங்கள் குற்றம் சொல்வதைப் போலத்தான் நீங்களும் மித இஸ்லாம் என்ற மாயையில் உழல்கிறீர்கள். சொல்லப்போனால், இஸ்லாமிய நாடு என்பது உருவாக நல்ல வாய்ப்பு இருக்கிறது. நல்ல மக்கள் வாளாவிருந்தாலே போதும், தீயவர்கள் அதிகாரம் பெறுவார்கள். ஆனால் மித இஸ்லாம் என்று கனவு நனவாக வாய்ப்பே இல்லை. உங்களால் ஒரு வட்டமான சதுரத்தை உருவாக்க முடிந்தால் ஒழிய மித இஸ்லாமை அமல் படுத்த முடியாது.

நம்மிருவருக்கும் நமது வாசகர்களுக்கும் எளிமையாக்கும் பொருட்டு ஒரு வேளைக்கு ஒரு கேள்வி அல்லது இரண்டு கேள்விகள் மட்டும் கேட்பேன், ( நான் முன்னரே சொன்ன படி இந்த பேட்டியை Faithfreedom.org ல் பதிவிடுவேன்)

வாஹித் எழுதிய கட்டுரையில் இருந்து தொடங்குகிறேன். அதில் அவர் எம்பு டான்டுளர் (Mpu Tantular) என்பவற்றின் கோட்பாடான இஸ்லாமில் “Bhinneka Tunggal Ika” (பன்மையில் ஒருமை) என்பதைப் பற்றி பேசுகிறார். முகமது எங்கே அது போன்ற கோட்பாட்டைப் பற்றி பேசுகிறான் என்று காட்டமுடியுமா? பன்மை இருக்க வேண்டுமானால் சகிப்புத்தன்மை வேண்டும். அதாவது வேறுபட்ட நம்பிக்கைகளும் ஓரிடத்தில் ஒன்றாக இருக்க முடிய வேண்டும். அதற்கு எண்ணச்சுதந்திரம் வேண்டும். இஸ்லாம் அப்படிப்பட்ட சுதந்திரத்தை அனுமதிக்கிறதா? மக்கள் இஸ்லாம் பொய் என்று சொல்ல முடியுமா? இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர் பின்னர் அதைவிட்டு விலக முடியுமா? முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் இஸ்லாமை கைவிட முடியுமா? உங்களின் எண்ணங்கள் என்ன என்று எனக்குத் தெரியும்.. உங்கள் பதில் ஆம் தான். ஆனால் இஸ்லாம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைத்தான் நான் அறிய விரும்புகிறேன்.

நீங்கள், “உங்களுக்கு உங்கள் வழி எனக்கு என் வழி” என்ற சுரா 109 ஐ மேற்கோள்காட்டி, அது சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது என்கிறீர்கள்.

அது அப்பொருளைத்தான் கொடுக்கிறது என்றால், அது சகியாமையை தூண்டும் பல வாசகங்களுடன் முரண்படுகிறது. எ.கா. 3.85.”இன்னும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அத்தகையவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.” மற்றும் 8.39 ” (இஸ்லாமில்) நம்பிக்கையுடையவர்களே! (முஸ்லிமல்லாதோரின்) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.”

அதுவுமில்லாமல், மௌதூதி (Maududi) , குத்ப் (Qutb), மற்றும் பல இஸ்லாமிய வல்லுனர்கள் இங்கே எந்த முரண்பாடும் இல்லை என்றும் “உங்களுக்கு உங்கள் வழி எனக்கு என் வழி” என்று வாசகத்தை சகிப்புத் தன்மைக்காண அடையாளம் என்று நினைப்பவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் என்கிறார்கள்.

மௌதூதி எழுதிய குரான் பொழிபபுரையில் இவ்வாறு எழுதுகிறார்.

“இந்த சுராவை இந்த பின்புலத்தை மனதில் வைத்துக்கொண்டு படித்தால், இன்று சில மக்கள் நினைப்பதைப்போல அது மத சகிப்புத்தன்மையை போதிப்பதற்காக சொல்லப்பட்டதல்ல என்றும் அது முஸ்லிம்களை இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்களின் மதங்களையும், அவர்களின் சடங்குகளையும், கடவுள்களையும் ஒதுக்குவதற்காகவும், அவர்களின் அருவருப்பையும் சம்பந்தமின்மையையும் காட்டுவதற்காகவும், இஸ்லாமுக்கும் குப்ருக்கும் (kufr = இஸ்லாமை நம்பாமை) சம்மந்தமே இல்லை என்று சொல்வதற்காகவும், இரண்டையும் கலந்து ஒரே முறையாக செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்வதற்கும் தான் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவ்வாசகம் ஆரம்பத்தில் இஸ்லாமை நம்பி ஏற்றுக்கொள்ளாத குறைஷிக் (Quraish) களுக்காக அவர்கள் சமாதானாத்தை வேண்டியபோது சொல்லப்பட்டாலும் அது அவர்களுக்கு மட்டும் பொருந்துவதல்ல. இதை குரானின் ஒரு வாசகமாக வைத்ததன் மூலம், அல்லா முஸ்லிம்களுக்கு அவர்கள் இஸ்லாமை ஏற்காதவர்களுடன் வாக்கினாலும் செயலினாலும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இஸ்லாமை ஏற்காதவர்களுடன் எந்த ஒரு சமாதானத்தையும் விரும்பவில்லை என்று எந்த தயக்கமும் இல்லாமல் அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு என்றென்றைக்கும் அழியாத போதனையை தந்தார். அதனால் தான் இந்த சுரா இது யாருக்காக சொல்லப்பட்டதோ அவர்களெல்லாம் இறந்துபோய் மறக்கப்பட்டுப்போன பின்பும் தொடர்ந்து ஓதப்படுகிறது. இது சொல்லப்பட்ட காலத்தில் இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்களாக இருந்தவர்களும், இதைத் தொடர்ந்து ஓதினார்கள். குப்ருடன் (kufr = இஸ்லாமை நம்பாமை) அருவருப்பைக் காட்டுவதற்கும், ஒட்டுஉறவு இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவும், இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தவும், நூற்றாண்டுகள் கழித்தும், முஸ்லிம்கள் இன்றும் இதை தொடர்ந்து ஓதுகிறார்கள். [www.usc.edu/dept/MSA/quran/maududi/mau109.html]

மௌதூதியைக் கூட ஏன் நம்ப வேண்டும்? சிராவில் (முகமதின் வரலாறு)  இந்த வாசகத்திற்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தையே (sha’n-e nodhul) படிக்கலாமே. அதை எழுதிய இப்ன் ஐசக் (Ibn Ishak) இவ்வாறு குறிப்பிடுகிறார். தூதர் காபாவை சுற்றி போய்க்கொண்டு இருந்தபோது, மெக்காவின் பல முக்கிய மனிதர்கள் அவரை சந்தித்து இவ்வாறு சொன்னார்கள். “முகமது, வா நீ வணங்குவதை நாங்கள் வணங்குகிறோம். நாங்கள் வணங்குவதை நீ வணங்கு. நீங்களும் நாங்களும் இனைந்து கொள்ளலாம். நீ வணங்குவது சிறந்ததாக இருந்தால் அதில் நாங்களும் பங்கு பெறலாம். நாங்கள் வணங்குவது சிறந்ததாக இருந்தால் அதில் நீயும் பங்கு பெறலாம்.” ஆகையால் அவர்களைக் குறித்து அல்லா கீழ்வருமாறு வெளிப்படுத்தினார் “”(நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே! (இஸ்லாமை ஏற்காதவர்கள்) நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்” அதாவது, நீங்கள் எதை வணங்குகிறீர்களோ அதை நான் வணங்கினால்தான் நீங்கள் அல்லாவை வணங்குவீர்கள் என்றால், எனக்கு நீங்கள் தேவை இல்லை. உங்கள் மதத்தை முழுக்கமுழுக்க நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு என்னுடையது இருக்கிறது. [சிரா ப. 165]

இதைப்பார்த்து இந்த சுரா மத சகிப்புத்தன்மையைப் பற்றியது அல்ல என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம். தன் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் இப்படித்தான் நார்சிச்ட்டுகள் (narcissist = தன்னை மட்டுமே அதிசிறந்தவர்களாக கருதி தற்காதல் புரிபவர்கள்) தங்கள் ஏளனத்தைக் காட்டுவார்கள். இதனால் முகமது சொல்லவருவது என்ன வென்றால் நீங்கள் நான் சொல்வதை நம்பினால் என்ன நம்பாவிட்டால் என்ன.

முஸ்லிம்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக குரானை எப்படித் திரிக்கிறார்கள் என்பது தெரிகிறதா? இஸ்லாமிய நாடுகளில் இந்த வாசகம் தவறான பொருளில் பயன்படுத்துவதில்லை. முஸ்லிமல்லாதோர் இருக்கும்போதுதான் முஸ்லிம்கள் இதன் பொருளை திரித்து இஸ்லாமை மிதமாக காட்ட முற்படுகிறார்கள்.

முகமதுக்கும் சகிப்புத்தன்மைக்கும் சம்மந்தமே இல்லை. அவன் குரைஷிக்களின் மதத்தை கேவலப்படுத்த ஆரம்பிக்கும் போது மெக்காவில் இருந்தான். அவனுக்கு கைவிட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பின்பற்றிகள் இருந்தனர். ஒருநாள் அவன் காபாவை சுற்றி வந்து கொண்டிருந்த போது, அங்கே மூப்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அவனை மக்களின் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்றும், பெற்றோர்களுக்கு எதிராக அவர்களின் மக்களைத் திருப்பவேண்டாம் என்றும் எஜமானர்களுக்கு எதிராக அடிமைப்படுத்தப்பட்டவர்களை தூண்டவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அவர்கள் தங்கள் கடவுள்களை அவமதிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதற்கு முகமது சொன்னான். “ஒ குறைஷிக்களே நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்னை கைக்குள் வைத்திருப்பவனின் பெயரால், நான் உங்களுக்கு அழிவைக் கொண்டுவருவேன்.” [சிரா இப்ன் ஐசக் ப. 131]

“தூதர் வெளிப்படையாக இஸ்லாமை போதிக்க துவங்கியபோது, அவர் குலத்து மக்கள், அவர்களின் கடவுள்களை அவர் கேவலப்படுத்த ஆரம்பிக்கும் வரை, அவரிடம் இருந்து விலகவோ அவருக்கு எதிராக திரும்பவோ இல்லை.” என்று இப்ன் ஐசக் சொல்கிறார். [Ibn Ishaq ப. 118]

இதுதான் சகிப்புத் தன்மையா? குறைஷிக்கள்தான் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள். முகமது எப்பொழுதும் சகிப்புத்தன்மை கொண்டிருந்ததில்லை. அவன் பெயரில்லாமல் இருந்தபோது கூட. அவன் ஆரம்பத்தில் இருந்தே கொடியவனாக இருந்தான்.

“உங்கள் சாக்குப்போக்கு வேலைக்காகாது. நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டபிறகு அதை நிராகரித்து விட்டீர்கள், நான் உங்களில் சிலரை மன்னித்தபோதிலும், மற்றவர்களை தண்டிக்காமல் விடப்போவதில்லை. ஏனென்றால் நீங்கள் பாவிகள்.” (Q 9: 66) என்ற வாசகத்தில் சகிப்புத்தன்மையை கிஞ்சித்தேனும் நுகர முடிகிறதா?

அன்புடன்.

அலி

Translation: Ali Sina’s Tamil Fan